< Back
உலக செய்திகள்
சூடான் மோதல்:  9 ஆயிரம் பேர் பலி; புலம்பெயர்ந்த 60 லட்சம் மக்கள்
உலக செய்திகள்

சூடான் மோதல்: 9 ஆயிரம் பேர் பலி; புலம்பெயர்ந்த 60 லட்சம் மக்கள்

தினத்தந்தி
|
13 Feb 2024 8:52 AM IST

சூடான் மோதலை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து தெற்கு சூடானுக்கு 5.4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

ஜூபா,

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான மோதலால் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இதுபற்றி ஐ.நா.வின் மனிதாபிமான அலுவல்கள் அமைப்பு கூறும்போது, சூடான் மோதலால் 9 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சூடானுக்கு உள்ளேயும், வெளியேயும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். 2.5 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை, சூடானில் இருந்து தெற்கு சூடானுக்கு 5.4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். டிசம்பர் மத்தியில் சூடானில் மோதல் அதிகரித்ததும், அகதிகளின் வருகையும் அதிகரித்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

இந்த மோதல் பற்றி சேவ் தி சில்டிரன் என்ற சர்வதேச தொண்டு அமைப்பு வெளியிட்ட செய்தியில், சூடான் அகதிகள் பலர் தங்குவதற்கான முகாம்கள் அமைந்த அபெய் சிறப்பு நிர்வாக பகுதியில் கடந்த 2 வாரங்களில் 3 குழந்தைகள் உள்பட 75 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,200 பேர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்