< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வட இந்தியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வட இந்தியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
21 March 2023 5:32 PM GMT

டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், வட இந்திய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், அரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இரவு 10.22 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லி அருகே உள்ள காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்