சீனாவில் செல்போன்கள் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு..!
|சீனாவில் செல்போன்கள் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பீஜிங்,
நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகிவிட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்த சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இது தொடர்பாக சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரமும் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் 2 மணி நேரம் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போனில் எந்தவிதமான சேவையும் வழங்கப்பட கூடாது. 18 வயதுக்குட்பட்டவர்கள் மொபைல் சாதனங்களில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் பேஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது. குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பும் ஸ்மார்ட்போனில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இணைய சேவை வழங்குபவர்கள், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேர வரம்புகளில் இருந்து விலக்கு பெற பெற்றோர் கேட்டுக்கொண்டால் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாடல்கள் மற்றும் ஆடியோ உள்ளடக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.
12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் செய்தி சார்ந்த உள்ளடக்கம் மட்டுமே காட்டப்பட வேண்டும். தவறான பழக்கத்தை தரும் உள்ளடக்கத்தை வழங்காமல் இப்போதே உறுதி செய்யுமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சீனா அரசு அறிவுறுத்தி உள்ளது.