< Back
உலக செய்திகள்
சுனிதா வில்லியம்ஸ் இருக்கும் ஸ்டார்லைனர் விண்கலனில் விசித்திரமான சப்தங்கள்
உலக செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ் இருக்கும் ஸ்டார்லைனர் விண்கலனில் விசித்திரமான சப்தங்கள்.. நாசா விளக்கம்

தினத்தந்தி
|
3 Sept 2024 5:32 PM IST

ஸ்பீக்கரில் இருந்து வந்த சப்தம், விண்கலனில் உள்ளவர்களுக்கோ, விண்கலனுக்கோ எந்த தொழில்நுட்ப தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நாசா கூறி உள்ளது.

நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கிறார்கள்.

விண்வெளியில் சுமார் 3 மாதங்களாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தங்கியிருக்கும் ஸ்டார்லைனர் விண்கலனில் இருந்து விசித்திரமான சப்தங்கள் கேட்டுள்ளன. ஸ்பீக்கர்கள் மூலம் துடிக்கும் ஒலிகள் கேட்பதாக வில்மோர் நாசாவிடம் கூறியிருக்கிறார். இதனால் விண்கலனில் வேறு ஏதாவது கோளாறு ஏற்பட்டிருக்குமோ? என்ற பதற்றம் உருவானது.

ஆனால் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும், விண்வெளி நிலையத்திற்கும் ஸ்டார்லைனருக்கும் இடையிலான ஆடியோ கட்டமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த ஒலி ஏற்பட்டதாகவும் நாசா விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஸ்டார்லைனர் விண்கலனில் உள்ள ஸ்பீக்கரில் இருந்து வந்த துடிக்கும் சம்தம் நிறுத்தப்பட்டது. விண்வெளி நிலைய ஆடியோ சிஸ்டம் சிக்கலான அமைப்பை கொண்டது. பல விண்கலங்கள் மற்றும் தொகுதிகள் ஒன்றோடொன்று இணைக்க அனுமதிக்கிறது. சில சமயங்களில் சப்தம் கேட்பதுண்டு.

விண்வெளி வீரர்கள் இதுபோன்று ஒலிகளை கேட்டால், உடனே கட்டுப்பாட்டு அமைப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஸ்பீக்கரில் இருந்து வந்த சப்தம், விண்கலனில் உள்ளவர்களுக்கோ, விண்கலனுக்கோ அல்லது விண்வெளி நிலைய செயல்பாடுகளுக்கோ எந்த தொழில்நுட்ப தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஸ்டார்லைனர் விண்கலம் செப்டம்பர் 6-ம் தேதி விண்வெளி நிலையத்திலிருந்து ஆளில்லாமல் புறப்படுவதிலும் சிக்கல் இல்லை.

இவ்வாறு நாசா கூறி உள்ளது.

இதற்கிடையே, வரும் வெள்ளிக்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆளில்லாமல் புறப்படும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலன், சனிக்கிழமை அன்று நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் தரையிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்