< Back
உலக செய்திகள்
ராணுவ தலையீட்டை நிறுத்துக:  அமெரிக்காவின் 7 நட்பு நாடுகளுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
உலக செய்திகள்

ராணுவ தலையீட்டை நிறுத்துக: அமெரிக்காவின் 7 நட்பு நாடுகளுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

தினத்தந்தி
|
13 May 2024 4:23 PM IST

ஐ.நா.வின் தடைகளை மீறும் செயலை கண்காணிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஆசிய பசிபிக் பகுதியில் ராணுவ தலையீட்டில் ஈடுபடும் செயலை நிறுத்தி கொள்ளும்படி வடகொரியா எச்சரித்து உள்ளது.

பியாங்யாங்,

அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் ஆசிய பசிபிக் பகுதியில் ராணுவ தலையீட்டை உடனடியாக நிறுத்தி கொள்ளும்படி வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரலில், கொரிய தீபகற்ப பகுதியருகே கடல்வழி பகுதிகளில் தென்கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து கடந்த மாதம் அமெரிக்காவும் 2 நாட்கள் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது. இந்த மாத தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் ஹெலிகாப்டர் ஒன்று வடகொரிய பகுதியில் ஆய்வில் ஈடுபட்டது.

இதனை சர்வதேச வான்வெளியில் வைத்து சீனாவின் போர் விமானம் வழிமறித்தது. கடந்த அக்டோபரில், இதேபோன்ற சூழலில், கனடாவின் விமானம் ஒன்று இடைமறிக்கப்பட்டது.

வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை மற்றும் தீர்மானங்களை அமல்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அப்போது தெரிவித்தது.

இந்நிலையில், ஐ.நா.வின் தடைகளை மீறும் செயலை கண்காணிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஆசிய பசிபிக் பகுதியில் ராணுவ தலையீட்டில் ஈடுபடும் செயலை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என வடகொரியா கூறியுள்ளது.

வடகொரியா தன்னுடைய இறையாண்மையை பாதுகாக்க முழு அளவிலான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் காரணமேயின்றி மற்றும் கண்மூடித்தன கொள்கைகளால் அமெரிக்காவை பின்பற்றுவது என்பது அவர்களுடைய சொந்த நலன்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் செயலாகும் என்ற உண்மையை புரிந்து சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் வடகொரியா தெரிவித்து உள்ளது. மண்டல அளவிலான பதற்றங்களை தூண்டும் செயலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்து உள்ளது.

2022-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றங்கள் அதிகரித்தே காணப்படுகின்றன. அணு ஆயுத ஏவுகணைகள் உள்பட ஆயுத பரிசோதனைகளை வடகொரியா அதிகரித்தது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளை எதிரிகளாக கருதும் வடகொரியா அந்நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஆயுத தொழிற்சாலைகளுக்கு கிம் ஜாங் அன் நேரில் சென்று பார்வையிட்டார். உயர்ரக துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணை லாஞ்சர்கள் உள்ளிட்ட ஆயுதங்களை தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் சகோதரி கிம் யோ ஜாங் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சென்றிருந்தனர். இந்த ஆய்வில், ஆயுதங்களின் தரம் பற்றி கிம் புகழ்ந்து கூறியதுடன், உற்பத்தி திட்டங்களை தடையின்றி அமல்படுத்தும்படி தொழிற்சாலைகளை கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்