பிடிவாதம் வேண்டாம்.. இந்தியாவுடன் பேசுங்கள்.. மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் வலியுறுத்தல்
|மாலத்தீவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்தியா கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிபர் முய்சு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மாலே:
சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு, மாலத்தீவின் அதிபராக பதவியேற்றதையடுத்து, இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. அந்நாட்டு மந்திரிகள் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்தனர். மாலத்தீவின் விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என அதிபர் முய்சு கெடு விதித்தார். அதன்படி இந்திய ராணுவத்தின் முதல் குழுவினர் நாடு திரும்பினர். எஞ்சியுள்ள வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவு செல்லக்கூடிய இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
இதற்கிடையே, மாலத்தீவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்தியா கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிபர் முய்சு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மாலத்தீவுக்கு மிகப்பெரிய உதவி வழங்குவதில் இந்தியா பெரிய பங்கு வகித்ததாகவும், அதிக அளவிலான திட்டங்களை செயல்படுத்தியதாகவும் கூறிய அவர், மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மாலத்தீவின் பொருளதார நிலைக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
இந்த சூழ்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் கூறியுள்ளார்.
மாலேயில் நடந்த கூட்டத்தில் சோலிஹ் பேசியதாவது:-
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியாவுடன் பேசுவதற்கு முய்சு விரும்புவதாக செய்தியை பார்த்தேன். ஆனால், மாலத்தீவின் நிதி நெருக்கடியானது இந்தியா கொடுத்த கடன்களால் ஏற்படவில்லை.
மாலத்தீவு இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய 8 பில்லியன் மாலத்தீவு ருபியாவுடன் (MVR)ஒப்பிடும்போது சீனாவிற்கு செலுத்தவேண்டியது அதிகம். சீனாவுக்கு 18 பில்லியன் MVR கடன் செலுத்த வேண்டும். கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 25 ஆண்டுகள்.
என்னும், அண்டை நாடுகள் நமக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். நாம் பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இதன்மூலம் பல நாடுகள் நமக்கு உதவி செய்யும். ஆனால் இந்த விஷயத்தில் அவர் (முய்சு) சமரசம் செய்ய விரும்பவில்லை. இப்போதுதான் அவர்கள் (அரசு) நிலைமையை புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றி வருவதுடன், மாலத்தீவு ஜனநாயக கட்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கியது. அந்த பொய்களை மறைக்க மந்திரிகள் இப்போது பொய் சொல்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.