இஸ்ரேலின் மொசாட்டிற்கு உளவுபார்த்ததாக 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான்
|இஸ்ரேல் - ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
தெஹ்ரான்,
இஸ்ரேல் - ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலை ஒரு நாடாக ஈரான் அங்கீகரிக்கவில்லை. மேலும், இஸ்ரேலுக்கு எதிராக செயல்களிலும் ஈரான் ஈடுபட்டு வருகிறது.
சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஈரான் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
ஈரான் அணு ஆயுத வல்லமை பெறுவதை விரும்பாத இஸ்ரேல் அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அதேவேளை, எதிரி நாடுகளான இஸ்ரேல், அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக ஈரான் அவ்வப்போது தங்கள் நாட்டை சேர்ந்த பலரை கைது செய்து வருகிறது. கைது செய்யப்படுவர்களுக்கு மரண தண்டனை உள்பட கொடூர தண்டனைகளையும் விதித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 4 பேருக்கு ஈரான் இன்று தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு வேலை செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் 7 பேரை கைது செய்தது.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஹசன், ஷாகின் இமானி, அஷ்ரபி, ஷாபெண்டி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 3 பேருக்கும் 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.