இஸ்ரேலில் கத்திக்குத்து; 2 பேர் சாவு - தாக்குதல் நடத்திய பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொலை
|ஜெருசலேம் நகரில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்த ஆண்டில் மட்டும் 23 இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனர்கள் சுமார் 130 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஜெருசலேம்,
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளான மேற்குகரை மற்றும் ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலின் மேற்குகரை பகுதியில் உள்ள ஏரியல் நகரில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் கியாஸ் நிலையத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்த இஸ்ரேலியர்களை பாலஸ்தீன வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர்.
இதையடுத்து கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு நபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்குகரை மற்றும் ஜெருசலேம் நகரில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்த ஆண்டில் மட்டும் 23 இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனர்கள் சுமார் 130 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.