இலங்கையில் நீதித்துறை மந்திரி ராஜினாமா.. அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்
|ஒரே மந்திரி சபையில் இருந்து இரண்டு பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்ததை அடுத்து பிரச்சினைகள் எழுந்ததாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு:
இலங்கையின் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும்.
தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மார்க்சிஸ்ட் ஜே.வி.பி தலைவர் அனுரா குமார திசநாயக்க ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இந்த வரிசையில் இலங்கையின் நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சவும் (வயது 65) இணைந்துள்ளார். இதற்காக அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சுதந்திர கட்சியின் தலைவரான விஜயதாச ராஜபக்ச, தனது முடிவு குறித்து கூறியதாவது:
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன். விரைவில் அறிவிக்கப்படும் புதிய கூட்டணியின் கீழ் அதிபர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வேன்.
நானும் தற்போதைய அதிபரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததை அடுத்து பிரச்சினைகள் எழுந்தன. நாங்கள் இரு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரே மந்திரி சபையில் இருந்து இரண்டு பேரும் போட்டியிடுவது முக்கிய பிரச்சினையாக இருந்தது. இது தொடர்பாக அதிபர் எனது கருத்தைக் கேட்டார். அதன்பின்னர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக எனது மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவிற்கு தலைமை தாங்கும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஆதரவை விஜயதாச ராஜபக்ச பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi