ரத்தாகிறது இலங்கையில் அதிபரின் அதிகாரம்..!! அரசியல் சாசன திருத்தத்துக்கு இன்று மந்திரிசபை ஒப்புதல்
|இலங்கையில் அதிபரின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை ரத்து செய்யும் வகையிலான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு, மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
கொழும்பு,
இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதிபருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கி அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
அது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பதவிகளை பெறவும் வழி வகுத்தது. நாடாளுமன்றத்துக்கு அதிபரை விட கூடுதல் அதிகாரங்களை வழங்கிய 19-வது திருத்தமும் ரத்தானது.
தற்போது இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன. கடுமையான மின்வெட்டு அமலில் உள்ளது. இந்த நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என மக்கள் கருதுகின்றனர். இதனால் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற பெரும் போராட்டத்தை கையில் எடுத்தனர். அந்த போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நெருக்கடி முற்றிய நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றார்.
அதைத் தொடர்ந்து அங்கு அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் ரத்து செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின. இப்போது அதற்கான அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இதையொட்டி நீதித்துறை மந்திரி டாக்டர் விஜயதாச ராஜபக்சே பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
அதிபருக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனத்தின்20-ஏ பிரிவை செல்லாதது ஆக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தத்துக்கான மசோதா மந்திரிசபை கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒப்புதலுக்கு வைக்கப்படும்.
இந்த அரசியல்சாசன திருத்தம், தற்போதைய கமிஷன்களை மேலும் வலுப்படுத்தும், கூடுதல் சுயாட்சிக்கும் வழிவகுக்கும். நாட்டின் மத்திய வங்கிக்கு கவர்னரை நியமிக்கும் அதிகாரம், அரசியல் சாசன கவுன்சிலின் கீழ் கொண்டு வரவும் புதிய திருத்தம் வகை செய்யும்.
மேலும் இரட்டை குடியுரிமை வைத்திருப்போர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதையும் புதிய திருத்தம் தடை செய்யும் என்று அவர் கூறி உள்ளார்.