உலக வங்கியிடம் ரூ.1,244 கோடி கடன் வாங்கும் இலங்கை
|நாட்டின் நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடன் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது மக்களின் கோபத்தை தூண்டி ஆட்சியாளர்களை பதவி விலக வைத்தது. எனினும் அந்த நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீளவில்லை.
இந்த நிலையில் உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,244 கோடி) கடன் பெற இருப்பதாக இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடன் பெறப்படுவதாகவும், இது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "உலக வங்கியில் இருந்து கடன் பெறும் திட்டம் இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்பு காப்புறுதி திட்டத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும். இதன் மூலம் இலங்கை நிதித் துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த முடியும்" என்றார்.