6 காலாண்டுகள் வீழ்ச்சிக்கு பிறகு 4.5 சதவீத வளர்ச்சி.. ஏறுமுகத்தில் இலங்கை பொருளாதாரம்
|மொத்த பணவீக்கம், ஜனவரியில் 6.4 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.
கொழும்பு:
இலங்கை அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கியது. வெளிநாடுகளிடமிருந்து பெற்றிருந்த கடன் தொகை கடுமையாக உயர்ந்தது. மிக முக்கிய வருவாய் வரக்கூடிய சுற்றுலாத் துறையும், கொரோனா காலகட்டத்தில் முடங்கியது. இதனால் இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்த விவகாரம் இலங்கை அரசியலையே புரட்டிப்போட்டது. அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தலைமை வெற்றி பெற்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையின் பொருளாதாரம் ஏறுமுகத்தை அடைந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதாக அரசு அறிவித்தது. இதற்கு முக்கிய காரணம் இலங்கை சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் நல்ல முன்னேற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கியிருப்பதை மத்திய வங்கி உறுதி செய்துள்ளது. தொடர்ச்சியான ஆறு காலாண்டுகள எதிர்மறையான பொருளாதார வளர்ச்சிக்குப்பின், 2023-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 4.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது. மொத்த பணவீக்கம், ஜனவரியில் 6.4 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பிப்ரவரி இறுதியில் மொத்த கையிருப்பு 4.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. சீன மக்கள் வங்கியின் நிதி பரிமாற்ற ஒப்பந்த தொகையும் இதில் அடங்கும். மத்திய வங்கி கணித்ததைவிட கையிருப்பு அதிகரிப்பு சிறப்பாக இருந்ததாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
2022-ம் ஆண்டின் முற்பகுதியில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கைக்கு இந்தியா 4 பில்லியன் டாலர் நிதியுதவி செய்தது. எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்த உதவி முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.