அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கம் இலங்கை மந்திரி தகவல்
|பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பு,
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டுக்கு அதிக வருவாய் அளிக்கும் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து அடுத்த மாதம் (ஜூலை) முதல் விமானங்கள் இயக்கப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா நேற்று முன்தினம் தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டபின் அவர் இதை கூறினார்.
இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை நீளம் குறைவானது என்பதால், தற்போது இங்கிருந்து சிறிய ரக விமானங்களையே இயக்க முடியும். எனவே, ஓடுபாதையை விரிவுபடுத்த இந்தியா உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே இந்த விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசுடன் இந்தியாவும் உதவி செய்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபரில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து முதல் சர்வதேச விமானம் வந்தது.
சென்னை-பலாலி இடையே வாரம் 3 விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் 2019 நவம்பரில் இலங்கையில் ஆட்சிமாற் றம் ஏற்பட்டபிறகு விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.