< Back
உலக செய்திகள்
விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரை இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமர் - இலங்கை கண்டனம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரை இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமர் - இலங்கை கண்டனம்

தினத்தந்தி
|
20 May 2023 11:46 PM GMT

2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமருக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கொழும்பு,

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி முடிவுக்கு வந்தது. விடுதலைப்புலிகளுடனான அந்த இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் மாயமாக்கப்பட்டனர்.

இந்த போரின் 14-வது நினைவு தினம் கடந்த 18-ந் தேதி உலகமெங்கும் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் கனடாவில் வாழும் தமிழர்களும் இந்த தினத்தை அனுசரித்தனர்.

இதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:-

இனப்படுகொலை

முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை உள்ளிட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏராளமானோர் மாயமாகினர், காயம் அடைந்தனர், இடம்பெயர்ந்தனர்.

எங்கள் எண்ணமெல்லாம் இந்த போரில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்வோருடன் இருக்கிறது.

பல ஆண்டுகளாக நாடு முழுவதும் நான் சந்தித்த பலர் உள்பட இந்த மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனடியர்களின் கதைகள், மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவை குறித்து தீர்க்கமான நினைவூட்டலை வழங்குகிறது.

நாடாளுமன்றத்தில் தீர்மானம்

அதனால்தான் மே 18-ந் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

தூதரை அழைத்து கண்டனம்

கனடா பிரதமரின் இந்த உரை இலங்கைக்கு கடும் ஆத்திரத்தை கொடுத்து உள்ளது. அவரது இந்த கருத்துகளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்ததுடன், கடும் கண்டனத்தையும் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் இலங்கைக்கான கனடா தூதர் எரிக் வால்ஷுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி அழைத்தது. அத்துடன் நேரில் கண்டனத்தையும் பதிவு செய்தது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஒரு தேச தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற அறிவிப்புகள், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக கனடாவிலும் இலங்கையிலும் நல்லிணக்கத்தையும், வெறுப்பையும் வளர்க்கிறது' என கூறியுள்ளது.

இதுபோன்ற வெறுப்பு மற்றும் தவறான தகவல்களை வெளியிடுவதில் கனடாவும், அதன் தலைவர்களும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சகம், கனடா பிரதமரின் இந்த உரை உலகம் முழுவதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்ற அவரது நோக்கத்திற்கு முரணானது என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்