< Back
உலக செய்திகள்
இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்- கப்பல் மூலம் தப்புகிறார் கோத்தபய ராஜபக்சே?
உலக செய்திகள்

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்- கப்பல் மூலம் தப்புகிறார் கோத்தபய ராஜபக்சே?

தினத்தந்தி
|
9 July 2022 2:28 PM IST

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டம் வெடித்துள்ளது.

கொழும்பு,

அன்னிய செலவாணி நெருக்கடியால் இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர்.

இலங்கை அரசுக்கு எதிரான பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டங்களில் வன்முறையும் வெடித்தது. வரலாறு காணாத நெருக்கடியால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை பொருளாதார நெருக்கடி இன்னும் தீராததால், எரிபொருள் தட்டுப்பாடு போன்றவை நிலவுகிறது. இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், இன்று இலங்கை அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர்.மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அதிபர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரும் விலகினர். அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஒடியுள்ளார். மிகப்பெரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் நடைபெற்று வரும் நிலையில், கோத்தபய ராஜபக்ச பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சொகுசு கார்களில் வலம் வந்தனர். அதிபர் மாளிகைக்குள் இருந்த நீச்சல் குளத்திலும் போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகளில் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இலங்கையில் மீண்டும் அரசுக்கு எதிரான கிளர்ச்சி உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமாவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், கப்பல் மூலமாக கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்