
இலங்கை: மாபெரும் போராட்டத்துக்கு எதிர்க்கட்சி அழைப்பு - கொழும்புவில் பலத்த பாதுகாப்பு

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
கொழும்பு,
இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து பாதித்து வருகிறது. விலைவாசி உயர்வும், பொருட்களின் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசை கண்டித்து இலங்கையின் பிரபலமான இடதுசாரி கட்சியும், எதிர்க்கட்சிகளில் ஒன்றுமான ஜனதா விமுக்தி பெரமுனா இன்று (வியாழக்கிழமை) தலைநகர் கொழும்புவில் பிரமாண்டமான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டவும் கட்சி நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து கொழும்பு நகரை நோக்கி ஏராளமானோர் நள்ளிரவு முதலே புறப்பட்டனர். இன்று காலை கொழும்பு அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். போராட்டம் காரணமாக கொழும்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொழும்பு நகரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இலங்கை அதிபராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கைகளை எடுத்தார். கொழும்பில் முக்கிய பகுதிகளை உயர்மட்ட பாதுகாப்பு மண்டலங்களாக அறிவித்தார்.
சில நாட்களாக இலங்கையில் போராட்டம் ஓய்ந்து இருந்த நிலையில் மீண்டும் இன்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்த எதிர்க்கட்சி அழைப்பு விடுத்து இருப்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.