சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை விமான நிலையம்: இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
|விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷிய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
கொழும்பு,
இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு அருகில் மத்தள நகரில் கடந்த 2013-ம் ஆண்டு ரூ,1,743 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது. இதில் ரூ.1,584 கோடி சீனாவிடம் இருந்து கடனாக பெறப்பட்டது ஆகும். 12,000 சதுர மீட்டர் முனைய கட்டிடம், மிகப்பெரிய வணிக விமானங்களைக் கையாளும் அளவுக்கு நீளமான ஓடுபாதை, ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் ஆகியவற்றை கொண்டிருந்தாலும், திறக்கப்பட்டதில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமான சேவை, தொடர்ச்சியான நிதி இழப்பு போன்ற பிரச்சினைகளை இந்த விமான நிலையம் எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷிய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மந்திரி சபை நேற்று வழங்கியது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை 30 வருட காலத்துக்கு இந்தியா மற்றும் ரஷியாவை சேர்ந்த 2 நிறுவனங்களிடம் ஒப்படைக்க மந்திரி சபை அனுமதியளித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.