இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண ரஷியாவுடன் பேச்சுவார்த்தை!
|இலங்கையில் எரிபொருள் கொள்முதல் தொடர்பாக ரஷியாவுடன் கலந்துரையாடி வருவதாக அந்நாட்டின் எரிசக்தி துறை மந்திரி தெரிவித்தார்.
கொழும்பு,
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருள் கொள்முதல் தொடர்பாக ரஷியாவுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக அந்நாட்டின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை மந்திரி காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய விஜேசேகர, பொருளாதார நெருக்கடி தொடர்கின்ற நிலையில் எரிபொருளுக்கான கடன் வரியை, இந்திய அரசாங்கம் வழங்கியமைக்காக பாராட்டினார்.
அவர் கூறுகையில், "இலங்கையின் எரிபொருள் தேவைக்காக பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே, எந்த நாடும் எங்களுக்கு உதவ வந்தாலும், அதை நாங்கள் பாராட்டுகிறோம். இப்போதைக்கு இந்திய அரசு மட்டும்தான் நமக்குக் கடன் கொடுத்திருக்கிறது.
ரஷிய அரசாங்கத்துடனும் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். இலங்கைக்கு எவ்வாறான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதை அறிய நாங்கள் காத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
மேலும், இன்று முதல் இலங்கையில் "தேசிய எரிபொருள் அனுமதி" திட்டம் என்ற பெயரில் எரிபொருள் விநியோக திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.
மக்களுக்கு புதிய பாஸ் அளிக்கப்பட்டு, வாராந்திர அடிப்படையில் எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு தேசிய அடையாள அட்டை எண்ணுக்கும் கியூ-ஆர் குறியீடு பாஸ் வழங்கப்படும். தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எரிபொருளை எடுத்துச் செல்வதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.