தமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைத்தது இலங்கை அரசு
|இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர சிறப்பு குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது முதல், இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.
தற்போது ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்ைக தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது. அவர்களில் சுமார் 68 ஆயிரம் பேர், நூற்றுக்கு மேற்பட்ட அரசு முகாம்களில் தங்கி உள்ளனர்.
இதற்கிடையே, போர் முடிந்து விட்டதால், இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கோரிக்கை விடுத்தது.
அதை ஏற்று இலங்கை அதிபர் அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயகே தலைமையில் இந்த ஆலோசனை நடந்தது. அதில், இலங்கை தமிழர்களை அழைத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாட்டில் இருந்து இலங்கை தமிழர்களை அழைத்து வந்து இலங்கையில் மீண்டும் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஒரு குழுவை இலங்கை அரசு நேற்று அமைத்தது.
அதிபரின் கூடுதல் செயலாளர் சண்டிமா விக்ரமசிங்கே தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான பணிகளை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் அலுவலகம் ஒருங்கிணைக்கும் என்று இலங்கை அரசின் இணையதளம் தெரிவித்துள்ளது.