< Back
உலக செய்திகள்
கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை - இலங்கை சுப்ரீம் கோர்ட்டு
உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை - இலங்கை சுப்ரீம் கோர்ட்டு

தினத்தந்தி
|
8 Oct 2022 10:10 PM IST

இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிற கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை எடுக்க அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

இலங்கையின் பொருளாதாரம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் விலைவாசி உயர்வு, அன்னியச்செலாவணி கையிருப்பு இல்லாததால் இறக்குமதி பாதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன.

இதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இந்த நிலைக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவி வகித்த அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே, நிதி மந்திரியாக இருந்த பாசில் ராஜபக்சேதான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி கொதித்தெழுந்தனர்.

அது இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுத்தது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் 37 பேர மீது் நிதி முறைகேடு, தவறான பொருளாதார மேலாண்மை குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா என்ற அமைப்பும், இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னேயும், இன்னும் சிலரும் வழக்குகளை தொடுத்தனர்.

முன்னாள் நிதி மந்திரி பாசில் ராஜபக்சேயும், மூத்த அதிகாரிகளும்கூட குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூரியா, நீதிபதிகள் பூவனேகா அலுவிகாரே, விஜித் மாலல்கோதா, தேகிதெனியா அமர்வு விசாரித்தது.

இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் 37 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை நாணய மதிப்பை ரூ.203 என நிர்ணயித்த இலங்கை நிதி வாரியத்தின் முடிவு, சர்வதேச நிதியத்தில் நிதி உதவி கோரியதில் ஏற்பட்ட தாமதம், அன்னியச்செலாவணி கையிருப்பை பயன்படுத்தி 500 மில்லியன் டாலர் கடன்பத்திரங்களை (சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி) தீர்த்தது உள்ளிட்டவை தொடர்பாக கணக்கு தணிக்கையர் தணிக்கை செய்து, இது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, பாசில் ராஜபக்சே, மந்திரிசபை, நிதி வாரியம், மத்திய வங்கி முன்னாள் கவர்னர்கள், முன்னாள் நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தகவல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் நகல்களை மத்திய வங்கி கவர்னர் டாக்டர் நந்தலால் வீரசிங்கே தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது.

இது தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்