இலங்கை: பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் காத்திருந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
|இலங்கையில் பெட்ரோல் வாங்க வரிசையில் நின்றிருந்த முதியவர் உயிரிழந்தார்.
கொழும்பு,
இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் பிழைப்பு தேடி சென்று வருகின்றனர். இதனால் பாஸ்போர்ட்டு பெறுவதற்காக கொழும்புவில் உள்ள அலுவலகத்தில் தினந்தோறும் நீண்ட வரிசை காணப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த அலுவலகத்தில் பாஸ்போர்ட்டு பெறுவதற்காக 26 வயது கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் கடந்த 2 நாட்களாக வரிசையில் காத்திருந்தார். அவருக்கு நேற்று காலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
வலியால் துடித்த அவரை ராணுவ வீரர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கொழும்புவின் தெற்கு பகுதியான பயகலாவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் வாங்குவதற்காக கடந்த 2 நாட்களாக 60 வயது முதியவர் ஒருவர் காத்திருந்தார்.
அவர் நேற்று காலையில் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக தெரிகிறது. இதன் மூலம் பெட்ரோல்-டீசல் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து விட்டது. இத்தகைய தொடர் உயிரிழப்பு சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.