< Back
உலக செய்திகள்
உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: சீனா கடும் கண்டனம்
உலக செய்திகள்

உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: சீனா கடும் கண்டனம்

தினத்தந்தி
|
5 Feb 2023 10:38 AM IST

உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.



பீஜிங்,


அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்கா கூறியது.

உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிரவும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதற்காக அந்த முயற்சியை கைவிட்டு விட்டோம் என அமெரிக்க ராணுவம் கூறியது.

அதன் இயக்கம் சார்ந்த தொடர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இதனை அடுத்து, அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதிபர் பைடன், கடந்த புதன்கிழமை பலூன் (சீனாவின் கண்காணிப்பு பலூன்) பற்றி என்னிடம் விவரங்களை கூறினார்கள். அதனை முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுட்டு தள்ளும்படி பென்டகனுக்கு (ராணுவ தலைமையகம் அமைந்த) உத்தரவிட்டேன்.

அவர்கள் அதனை சுட்டு வீழ்த்தி விட்டனர். நிலப்பகுதியில் வசிக்கும் யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர்.

எங்கள் நாட்டில் இருந்து 12 மைல் எல்லைக்குள், நீரின் மேற்பரப்பில் வந்தபோது, சிறந்த தருணத்தில் அதனை வீழ்த்த முடிவு செய்தனர். அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அதற்காக, இதனை செய்து முடித்த விமானிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.

இதற்கு முன்னர், அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் இந்த வார இறுதியில் மேற்கொள்ள இருந்த சீன பயணம் தள்ளி போடப்பட்டது.

எனினும், உளவு பலூன் பற்றி சீன வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், அது குடிமக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட விண் ஓடம் ஆகும். வானிலை ஆய்வு பணியில் ஈடுபட்ட நிலையில், திசைமாறி அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்து உள்ளது.

இதற்காக எங்களது தரப்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, எதிர்பாராது நடந்த இந்த சூழலை பற்றி விளக்குவோம் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், சீனாவின் பலூன் சுடப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் சீன வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு எதிராக கடும் அதிருப்தியையும், தனது எதிர்ப்பையும் வெளிப்படுத்தி உள்ளது. அது மக்களின் பயன்பாட்டுக்கான விண் ஓடம் என்று தெரிவித்து உள்ளது என குளோபல் டைம்ஸ் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்த விவகாரம் அமைதியான மற்றும் பொறுமையான முறையில், திறமையாக கையாளப்பட வேண்டும் என்றும் அமெரிக்காவை சீனா வலியுறுத்தி இருந்தது. ஆனால், அமெரிக்காவால் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது அதிகப்படியான செயல் மற்றும் சர்வதேச நடைமுறையை மீறிய தீவிர விசயம் இது எனவும் அந்நாடு இன்று குற்றச்சாட்டு கூறியுள்ளது.

சீனா நிச்சயம் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்கும். சட்டப்படி உரிமையை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அதுபற்றிய அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்