ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை துல்லியமாக நிலைநிறுத்த தவறிய பால்கன்-9 ராக்கெட்.. காரணத்தை ஆராயும் ஸ்பேஸ்எக்ஸ்
|பூமியின் சுற்றுவட்டப் பாதையில் திட்டமிடப்பட்ட புள்ளியில் செயற்கைக் கோள்களை விடுவிக்காமல் சற்று குறைந்த தொலைவிலேயே விடுவித்தது.
நியூயார்க்:
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ், அதிவேக இணைய வசதியை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் என்ற பெயரில் ஏராளமான செயற்கைக்கோள்களை அனுப்பி பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி உள்ளது. இந்த செயற்கைக் கோள்கள், பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகில் செயற்கைக்கோள்கள் சுற்றும் விண்வெளியின் பகுதியில் சுற்றி வருகின்றன. ஸ்டார்லிங்க் திட்டத்தில் தொடர்ந்து செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன.
அவ்வகையில், நேற்று 20 செயற்கைக் கோள்கள், பால்கன்-9 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டன. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், திட்டமிட்டபடி பயணித்து செயற்கைக் கோள்களை பூமியின் குறைந்த சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டு சென்றது. ஆனால், சுற்றுவட்டப் பாதையில் திட்டமிடப்பட்ட புள்ளியில் செயற்கைக் கோள்களை விடுவிக்காமல் சற்று குறைந்த தொலைவிலேயே விடுவித்தது. ராக்கெட்டில் ஏற்பட்ட அரிதான தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த பிரச்சினை எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஸ்பேஸ்எக்ஸ் ஆராய்ந்து வருகிறது.
இதுபற்றி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தனது டுவிட்டரில் உடனடியாக பதிவிட்டார். அதில், ராக்கெட் துவக்கத்தில் திட்டமிட்டபடி பயணித்து இரண்டாக பிரிந்து, கீழ் பகுதி டிரோன் ஷிப்பில் தரையிறங்கியது. ஆனால், 20 செயற்கைக்கோள்களை குறைந்த சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டு சென்ற மேல் பகுதியில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது' என தெரிவித்தார்.
அதன்பின்னர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் கூடுதல் தகவல்களை தெரிவித்தது. அதில், "ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களுடன் அனுப்பப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டின் இரண்டாவது நிலை இயந்திரம் தனது இரண்டாவது உந்து விசை பணியை முடிக்கவில்லை. இதன் விளைவாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் திட்டமிடப்பட்டதை விட குறைந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றில் இதுவரை 5 செயற்கைக்கோள்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் தொடர்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவற்றின் அயனி த்ரஸ்டர்களை (உந்துவிசை அமைப்பு) பயன்படுத்தி சுற்றுப்பாதையை உயர்த்த முயற்சிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டது.
செயற்கைக்கோள்களின் தொகுப்பு மூலம் பூமிக்கு மிக அதிவேகமான இணைய சேவையை ஸ்டார்லிங்க் வழங்கும். அதிவேக இணைய வசதி கிடைக்காத தொலைதூரப் பகுதிகளுக்கு இணைய சேவை வழங்குவதே இதன் குறிக்கோள்.
ஸ்டார்லிங்க் திட்டத்தின்கீழ் இதுவரை 6,100-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 69 முறை பால்கன்-9 ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 49 முறை ஸ்டார்லிங்க் பணிகளுக்காக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.