வட கொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக்கூடாது- தென் கொரிய அதிபர் வலியுறுத்தல்
|வட கொரியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே ஆயுதங்கள் சப்ளை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.
சியோல்:
வட கொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று தென் கொரியா வலியுறுத்தி உள்ளது. சர்வதேச அமைதியை கெடுக்கும் வகையில் ராணுவ விவகாரங்களில் வடகொரியாவுடன் ஒத்துழைக்கும் எந்த முயற்சியும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசியாவின் ஆசியான் உச்சி மாநாட்டில் தென் கொரிய அதிபர் இந்த கருத்தை தெரிவித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுதொடர்பான விரிவான தகவல் எதையும் அதிபர் அலுவலகம் வெளியிடவில்லை.
வட கொரியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே ஆயுதங்கள் சப்ளை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் புதினை சந்திக்க விரைவில் ரஷியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில், தென் கொரிய அதிபரின் கருத்து மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.
இதற்கிடையே ஆயுத சப்ளை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று வடகொரியாவும் ரஷியாவும் மறுத்துள்ளன.