'வடகொரியாவை சமாதானப்படுத்தும் காலம் முடிந்துவிட்டது' - தென்கொரியாவின் புதிய அதிபர் தடாலடி
|வடகொரியாவை சமாதானப்படுத்தும் காலம் முடிந்துவிட்டது என்று தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.
சியோல்,
1950-களில் நடந்த கொரிய போரின் போது வடகொரியாவும், தென்கொரியாவும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான பகைமை நிலவி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரியாவின் அதிபராக இருந்து வந்த மூன் ஜே இன் வடகொரியாவை சமாதானம் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் அவற்றை பொருட்படுத்தாததால் மூன் ஜே இன்னுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தென்கொரியாவில் அண்மையில் நடந்து முடிந்து அதிபர் தேர்தலில் வடகொரியா மீது கடுமையான நிலைப்பாட்டை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த யூன் சுக் இயோல் வெற்றி பெற்று அதிபரானார். பதவியேற்பு விழாவின்போது வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தனது அரசு தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வடகொரியாவை சமாதானப்படுத்தும் காலம் முடிந்துவிட்டது என்றும் தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையிலான எந்தவொரு புதிய பேச்சுவார்த்தையையும் கிம் ஜாங் அன்னால் மட்டுமே தொடங்க முடியும் எனவும் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு கிம்மிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவது அவரது விருப்பம். வடகொரியாவின் ஆத்திரமூட்டல் அல்லது மோதலில் இருந்து தற்காலிகமாக தப்பிப்பது நாம் செய்ய வேண்டிய ஒன்று அல்ல. கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற அணுகுமுறை தோல்வியடைந்துள்ளது" என கூறினார்.