ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பிய வெடிமருந்துகள் இவ்வளவா? பகீர் தகவலை வெளியிட்ட தென் கொரியா
|ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைகளை மீறி, வட கொரியாவுக்கு ரஷியா எரிபொருளை வழங்கியிருக்கலாம் என்று ஷின் வோன்-சிக் சந்தேகம் எழுப்பினார்.
சியோல்,
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் ரஷியாவுக்கு ஆதரவாக சீனா மற்றும் வடகொரியா உள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு ரஷிய அதிபர் புதினை வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்த பிறகு இரு நாடுகளிடையேயான உறவு மேலும் வலுவடைந்தது. அப்போது இரு நாடுகளிடையே ஆயுத ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் ரஷியா அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் இதுவரை, உக்ரைன் போரில் உதவுவதற்காக வெடிமருந்துகள் மற்றும் ராணுவ உபகரணங்களை உள்ளடக்கிய 7 ஆயிரம் கன்டெய்னர் லாரிகளை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியிருப்பதாக தென்கொரிய ராணுவ மந்திரி ஷின் வோன்-சிக் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் கப்பல்கள் மூலம் ஆயுதப் பொருட்களை ரஷியாவுக்கு அனுப்பிய வடகொரியா, பின்னர் ரெயில் பாதைகள் மூலம் தங்கள் நில எல்லை வழியாக அதிக அளவில் அனுப்பியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பல மில்லியன் எண்ணிக்கையிலான பீரங்கி குண்டுகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை அனுப்புவதற்கு ஈடாக, ரஷியாவிடம் இருந்து 9,000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் வட கொரியா உதவிப்பொருட்களை பெற்றிருக்கிறது. குறிப்பாக, நாட்டின் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைகளை மீறி, வட கொரியாவுக்கு ரஷியா எரிபொருளை வழங்கியிருக்கலாம் என்றும் ஷின் வோன்-சிக் சந்தேகம் எழுப்பினார்.