173 பேருடன் தரையிறங்கும் போது ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்த விமானம்...!
|இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த விமான நிலையமும் மூடப்பட்டது.
மணிலா,
தென்கொரியாவின் இச்யொன் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் விமானம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மெச்சன் நகருக்கு பயணித்தது.
விமானம் நேற்று இரவு பிலிப்பைன்ஸ் மெச்சன் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க நடந்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில், 3-வது முறையாக விமானத்தை விமானி தரையிறங்க முற்பட்டார். அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் இருந்துள்ளது. விமானி தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளி மீது பாய்ந்தது.
இதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் உள்பட 173 பேரும் அவசரகால வழி வழியாக விமானத்தில் இருந்து குதித்து தப்பித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மெச்சன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. புல்வெளியில் பாய்ந்த விமானத்தை மீட்கும்பணிகள் நடைபெற்று வருகிறது. ஓடுதளம் சரிசெய்யப்பட்ட பின் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.