தென்கொரியாவுக்குள் ஊடுருவ முயன்ற வடகொரிய வீரர்கள்: துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிப்பு
|தென்கொரியாவுக்குள் ஊடுருவ முயன்ற வடகொரிய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிக்கப்பட்டனர்.
சியோல்,
அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்களை தென்கொரியா பறக்க விட்டது. தென்கொரியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்களை வட கொரியாவுக்குள் பறக்க விட்டனர். மேலும், அதிக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்கள் மூலம் வடகொரியாவுக்கு எதிரான பிரசாரங்களையும் எல்லையில் மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பலூன் மூலம் தென்கொரியாவிற்குள் வடகொரியா குப்பைகளை வீசியது. சிகிரெட் துண்டுகள், வெற்று காகிதங்கள், கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகள் அடங்கிய பலூன்களை தென்கொரியாவிற்குள் வடகொரியா பறக்கவிட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன் ரஷிய அதிபர் வடகொரியா சென்றார். அவர் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், வடகொரிய ராணுவ வீரர்கள் தென்கொரியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதையடுத்து, வடகொரிய வீரர்களை எச்சரிக்கும் வகையில் தென்கொரிய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்தனர். இம்மாதத்தில் மட்டும் வடகொரிய வீரர்கள் இதுவரை 3 முறை தென்கொரியாவுக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.