தென்கொரியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்யும் முடிவு வாபஸ்
|போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை எனில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
சியோல்,
தென்கொரியாவில் வயதான மக்கள்தொகை மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை நெருக்கடியில் தவிக்கிறது. இதனை சமாளிக்க மருத்துவக்கல்லூரிகளில் 2035ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் இடங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால் அவ்வளவு மாணவர்களை கையாளக்கூடிய அளவுக்கு போதிய சுகாதார கட்டமைப்பு இல்லை. எனவே மருத்துவ சேவையை இது குறைமதிப்புக்கு உட்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அரசின் இந்த அறிவிப்பினை எதிர்த்து சுமார் 8 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் நிலவியது. இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை எனில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என தென்கொரியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்யும் முடிவை திரும்ப பெறுவதாக சுகாதாரத்துறை மந்திரி சோ கியோஹாங் கூறினார்.