சோமாலியா: ஓட்டலில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் - 9 பேர் பலி
|சோமாலியாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
கிஸ்மாயு,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.
மேலும், பொதுமக்கள், ராணுவத்தை குறிவைத்து அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்நாட்டின் கிஸ்மாயு நகரில் உள்ள ஓட்டலில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின், ஒட்டல் உள்ளே நுழைந்த பயங்ரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 9 பேர் பலியாகினா். 47 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதல் நடத்தி பயங்ரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.