அதிகரிக்கும் விண்வெளி சுற்றுலா மோகம் - அடுத்தடுத்து பயணிகளை அழைத்து செல்லும் புளூ ஆர்ஜின்
|புளூ ஆர்ஜின் நிறுவனம் இந்த வருடத்தில் 3-வது முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகி உள்ளது.
டெக்சாஸ்,
மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. குறிப்பாக ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் புளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக தற்போது புளூ ஆர்ஜின் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 5-வது முறையாக 6 பேர் கொண்ட சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்து சென்றது. அவர்கள் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர்.
இந்த நிலையில் தற்போது புளூ ஆர்ஜின் நிறுவனம் இந்த வருடத்தில் 3-வது முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு தயாராகி உள்ளது. இதற்காக 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் டியூட் பெர்பெக்ட் துணை நிறுவனர் கோபி காட்டன், போர்ச்சுகல் தொழிலதிபர் மரியோ ஃபெரீரா, கிளின்ட் கெல்லி , சாரா சப்ரி வனேசா ஓ பிரையன்,, ஸ்டீவ் யங் ஆகியோர் விண்வெளியில் 10 நிமிடங்கள் பயணம் செய்யவுள்ளனர்.
இதற்கான அதிகாரபூர்வ தேதி இன்னும் வெளியாகவில்லை. அதே போல் இந்த பயணத்திற்கான டிக்கெட் விலை குறித்து தகவல்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. இருப்பினும் இந்த பயணத்தின் டிக்கெட் விலை 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 220 கோடி ரூபாய் ஆகும்.