< Back
உலக செய்திகள்
ஈரானில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதலில் 2 போலீசார் பலி
உலக செய்திகள்

ஈரானில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதலில் 2 போலீசார் பலி

தினத்தந்தி
|
9 July 2023 1:07 AM IST

ஈரானில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர்.

அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல்

ஈரானில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இவர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் என அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்படுகின்றன.

பாகிஸ்தான் எல்லையில்...

இந்தநிலையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஈரானின் சிஸ்டான் மாகாணம் ஜாஹேடான் போலீஸ் நிலையத்துக்குள் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். அவர்களிடம் துப்பாக்கி, கையெறி வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. மேலும் அவர்கள் தாங்கள் உடலில் வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தனர். வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததால் அந்த போலீஸ் நிலையம் சேதமடைந்தது. இந்த தற்கொலை படையினரின் தாக்குதலில் 2 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் 4 பயங்கரவாதிகளும் செத்தனர்.

பதிலடியா?

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த அக்டோபர் மாதம் ஷிராஸ் நகரில் உள்ள ஷா செராக் மசூதியை தாக்கிய இருவர் கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு பதிலடியாக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்