< Back
உலக செய்திகள்
சகோதரி ஆணவ கொலை... சகோதரனுக்கு குடிக்க தண்ணீர் தந்த தந்தை; பாகிஸ்தானில் அவலம்
உலக செய்திகள்

சகோதரி ஆணவ கொலை... சகோதரனுக்கு குடிக்க தண்ணீர் தந்த தந்தை; பாகிஸ்தானில் அவலம்

தினத்தந்தி
|
1 April 2024 10:38 AM IST

சகோதரி ஆணவ கொலை வழக்கில் தந்தை அப்துல், இரு சகோதரர்கள் மற்றும் சகோதரரின் மனைவி என 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கராச்சி,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தோபா தேக் சிங் நகரருகே வசித்து வருபவர் அப்துல் சத்தார். இவருடைய மகள் மரியா பீபி (வயது 22). பீபிக்கு, முகமது பைசல் மற்றும் ஷெபாஸ் என இரு சகோதரர்கள் உள்ளனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் வீட்டில் இரவு வேளையில் படுக்கையறையில் பீபி இருந்தபோது, பைசல் வந்துள்ளார்.

அவர் திடீரென பீபியை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். அப்போது, பீபியின் தந்தை அப்துல் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை மற்றொரு சகோதரர் ஷெபாஸ் வீடியோவாக படம் பிடித்தபடி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில், பைசலை போகும்படி கூறுங்கள் என தந்தை அப்துலிடம் ஷெபாஸ் கூறுகிறார். பீபியின் உடல் அசைவற்றுப்போன நிலையில், 2 நிமிடங்களுக்கும் கூடுதலாக பீபியின் கழுத்து பகுதியை பிடித்து, நெரித்தபடியே பைசல் இருந்துள்ளார். எழுந்து போக மறுத்து விட்டார்.

இறுதியாக, பீபி உயிரிழந்தது உறுதியானபின், பைசலுக்கு அவருடைய தந்தை தண்ணீர் கொடுக்கிறார். அதனை வாங்கி பைசல் குடிக்கிறார். இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுபற்றி தோபா தேக் சிங் போலீஸ் அதிகாரி அடா உல்லா கூறும்போது, பீபி இயற்கையான முறையில் உயிரிழக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த விசயத்தில் நாங்களாகவே முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளோம். அப்துல் மற்றும் பைசலை உடனடியாக கைது செய்தோம்.

ஷெபாஸ் கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்த விவகாரத்தில் எந்தளவுக்கு தொடர்பு உள்ளது என விசாரிப்போம் என்றார். இது ஆணவ கொலை என்பதற்கான அனைத்து விசயங்களும் உள்ளன. வீடியோவில் ஷெபாசின் மனைவியும் இருக்கிறார். அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த படுகொலைக்கான காரணம் தெரிய வரவில்லை. ஆனால், அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் பலமுறை பீபி வீடியோ காலில் பேசியுள்ளார். இதனை சகோதரர் பைசல் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர். அந்நாட்டில் பெண்களை, ஆண்கள் கொலை செய்வதற்கு சட்ட நடைமுறை அனுமதிக்கிறது. அவர்கள் தண்டனையில் இருந்தும் தப்ப விடப்படுகிறார்கள்.

பாகிஸ்தானில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல விசயங்களில் ஆண் உறவினர்களையே, பெண்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அந்நாட்டு சமூகத்தில், இதற்கான கடுமையான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை மீறும் நூற்றுக்கணக்கான பெண்கள், ஒவ்வோர் ஆண்டும் ஆண்களால் கொல்லப்படுகிறார்கள். 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 316 ஆணவ கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன என மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கின்றது.

ஆனால், கொலைக்காரர்களை அதுவும் ஆண் உறவினர்களை, குடும்பத்தினரே பாதுகாக்க கூடிய சூழலால் பல வழக்குகள் வெளியே தெரியாமலேயே போய் விடுகின்றன.

மேலும் செய்திகள்