மறைந்த பிரபல பின்னணி பாடகர் கே.கே-வின் உடல் மும்பையில் இன்று தகனம்
|கே.கே-வின் உடல் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.
மும்பை,
பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் ( வயது 53) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்த அவர், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் இவர் 66-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அதில் காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு), ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.
நேற்று கொல்கத்தாவில் உள்ள ரபீந்திர சதனில் வைக்கப்பட்டு இருந்த பாடகர் கே.கே.வின் உடல். கே.கே. உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். கே. கே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அவரின் உடல் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.