பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு; மாணவி உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்
|பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து, மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துங்குவா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளியில் பாதுகாப்புக்காக போலீஸ்காரர் ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வகுப்புகள் முடிந்ததும் மாலையில் மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அந்த போலீஸ்காரர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கி குண்டு சத்தம் கேட்ட மாணவர்கள் பயத்தில் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதனால் பள்ளி வளாகம் போர்களம்போல் மாறியது. இந்த கோர சம்பவத்தில் 9 வயது மாணவி ஒருவர் தலையில் குண்டு பாய்ந்து ரத்தவெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆசிரியர் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அந்த போலீஸ்காரரை உடனடியாக கைது செய்த போலீசார் துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.