உக்ரைனில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தின் 9 பேர் கொடூர கொலை; 2 ரஷிய வீரர்கள் கைது
|உக்ரைனில், ரஷியாவின் பிடியிலுள்ள நகரில் 2 குழந்தைகள் உள்பட தூங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தின் 9 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கீவ்,
உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. எனினும், போரானது தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்த போரில், உக்ரைனின் கிழக்கே வோல்நோவாகா நகரை ரஷியா கைப்பற்றி உள்ளது. அந்நகரம், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச்சில் இருந்து ரஷியாவின் பிடியில் உள்ளது. இந்த சூழலில், உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியின் வழக்கறிஞர்கள் அலுவலகம் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.
அவற்றில், படுக்கைகளில் பலர் சுடப்பட்டு கிடக்கின்றனர். ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களான அவர்கள் ஒருவரையொருவர் கட்டி பிடித்தபடி காணப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள சுவர்களில் ரத்தக்கறை படிந்து காணப்பட்டது.
இந்த சம்பவத்தில், ரஷியாவின் ஆக்கிரமிப்பு படைகள் அவர்களை படுகொலை செய்து உள்ளது என உக்ரைன் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ரஷிய வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என ரஷிய அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
ராணுவ சீருடையில் ஆயுதங்களுடன் வந்த சிலர், அந்த குடும்பத்தினரை காலி செய்யும்படி இந்த மாத தொடக்கத்தில் மிரட்டினர். ஆனால், வீட்டு உரிமையாளர் அதற்கு மறுத்து விட்டார். இதனால், அந்த குடும்பத்தினரை அவர்கள் மிரட்டி, தாக்கி விட்டு தப்பி சென்றனர் என உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியின் வழக்கறிஞர்கள் அலுவலகம் வெளியிட்ட முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.