அமெரிக்காவில் அதிர்ச்சி; ஓட்ட பந்தயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு 14 வயது மாணவர் பலி
|அந்த பகுதியில் பரவலாக நன்மதிப்பை பெற்றிருப்பதுடன், தன்னார்வலராகவும் ஈவன் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
நியூயார்க்,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த மாணவன் நாக்ஸ் மேக்ஈவன் (வயது 14). டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த ஈவன், பயிற்சிக்காக ஓட்ட பந்தயம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வது வழக்கம்.
இதன்படி, 5 கி.மீ. ஓட்ட பந்தய பயிற்சியை ஈவன் மேற்கொண்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவசரகால சிகிச்சை குழுவினர் உடனடியாக சென்றுள்ளனர்.
எனினும், ஈவனை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்திற்கு பள்ளியின் முதல்வர் ஜிம்மி அர்ரோஜோ இரங்கல் தெரிவித்து உள்ளார். ஈவன் அந்த பகுதியில் பரவலாக நன்மதிப்பை பெற்றிருப்பதுடன், தன்னார்வலராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
ஈவனின் இறுதி சடங்கிற்காக குடும்ப நண்பர் ஒருவர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு, ரூ.55 லட்சம் சேர்த்துள்ளார்.
அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் கூடைப்பந்து விளையாட்டுக்கான பயிற்சியின்போது, காலிப் ஒயிட் (வயது 17) என்ற மாணவர் சரிந்து விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.