ராமர் பாலம் வழியாக தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து - இலங்கை மந்திரிகள் ஆலோசனை
|தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவது தொடர்பாக இலங்கை மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.
கொழும்பு,
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் துறை மந்திரி நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான கலந்துரையாடல் கூட்டம் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்தது.
இதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு அபிவிருத்தி மந்திரியுமான ஜீவன் தொண்டமான், இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள், இலங்கை கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகார சபை அதிகாரிகள், நில அளவை அதிகாரிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இலங்கையின் வடபகுதியில் உள்ள தலைமன்னாருக்கும், இந்தியாவின் தென்முனையில் உள்ள தனுஷ்கோடிக்கும் இடையேயான ராமர் பால பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும். ராமர் பாலம் வழியாக தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
மேலும் தலைமன்னார் முனையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்படும் சாதகத்தன்மை பற்றியும் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு ஆன்மிக பயணமாக 3 கோடி பேர் வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினரை ராமர் பாலம் வழியாக இலங்கைக்கு அழைத்து வந்தால், அதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்படும் என யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆரம்ப கட்ட கலந்துரையாடல் கூட்டம் சாதகமாக முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.