< Back
உலக செய்திகள்
விறுவிறுப்பாக நடந்த பொதுத்தேர்தல்: மீண்டும் வங்காளதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா
உலக செய்திகள்

விறுவிறுப்பாக நடந்த பொதுத்தேர்தல்: மீண்டும் வங்காளதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

தினத்தந்தி
|
8 Jan 2024 5:31 AM IST

தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் போலீசார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

டாக்கா,

அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அந்த ஒரு தொகுதிக்கு பின்னர் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் 436 சுயேச்சை வேட்பாளர் உள்பட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

இந்த சூழலில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். டாக்கா நகர கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பிரதமர் ஷேக் ஹசீனா தனது வாக்கை செலுத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இந்த தேர்தலில் பிரதமரும், அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றார். அவர் கோபால்கஞ்ச்-3 தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹசீனா பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 965. அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்காளதேச சுப்ரீம் கட்சி வேட்பாளர் நிஷாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த முடிவுகளை கோபால்கஞ்ச் துணை ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான காசிமஹ்புபுல் ஆலம் அறிவித்தார். ஷேக் ஹசீனா இந்த தொகுதியில் இருந்து 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும் என வங்காளதேச தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்