< Back
உலக செய்திகள்
அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது;கேட்பதும் மிக சங்கடமாக உள்ளது -பாகிஸ்தான் பிரதமர்
உலக செய்திகள்

அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது;கேட்பதும் மிக சங்கடமாக உள்ளது -பாகிஸ்தான் பிரதமர்

தினத்தந்தி
|
16 Jan 2023 3:12 PM IST

அணுசக்தி நாட்டுக்கு கடன் பெற வேண்டிய நிலை வெட்கக்கேடானது. கடன் கேட்க மிகவும் சங்கடமாக உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையான தட்டுப்பாடுகளால் பாகிஸ்தானின் விலைவாசி உயர்வு 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் 20 கிலோ பாக்கெட் ரூ.3,100-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.155-க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.280-க்கும், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.700-க்கும் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளைப் பொறுத்தவரையில் அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 25 சதவீதம் முதல் 62 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

பாகிஸ்தானின் பொருளாதாரம் இப்போது முழுக்க முழுக்க கடன் வாங்கிய பணத்தில் இயங்கி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து சுமார் 4 பில்லியன் டாலர் புதிய நிதி உதவியைப் பெற்றது. இது பாகிஸ்தான் கடன் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்க்க உதவும். கூடுதல் கடன்கள் பாகிஸ்தானின் கடன் சுமையை அதிகரிக்கவே செய்யும். 2025-க்குள் நாடு 73 பில்லியன் டாலரை திருப்பிச் செலுத்த வேண்டும

"இது இப்போது ஒரு மூச்சு கிடைத்திருக்கலாம், ஆனால் நாடு பொருளாதாரத்தை புதுப்பிக்க வேண்டும் - இல்லையெனில் அது மற்றொன்றை திருப்பிச் செலுத்த மேலும் ஒருவரிடமிருந்து கடன் வாங்க வேண்டும், அதுதான் இன்றைய சரியான நிலைமை என பொருளாத நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

ஜனவரி 6 ஆம் தேதி நிலவரப்படி, அதன் அன்னியச் செலாவணி கையிருப்பு 4.34 பில்லியன் டாலராக இருந்தது - அதில் பெரும்பாலானவை பிற நாடுகளின் கடனாக வந்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் உதவி சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தானை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கும் அதே வேளையில் இருப்புக்களை அதிகரிக்க ஓரளவு உதவும்.

பாகிஸ்தான் நிர்வாக சேவையின் (பிஏஎஸ்) தகுதிக்கான அதிகாரிகளின் தேர்ச்சி விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், `அணுசக்தி நாடு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது. கடன் கேட்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது.

பாகிஸ்தானின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டுக் கடன்களை நாடுவது சரியான தீர்வாகாது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பாகிஸ்தானுக்கு மேலும் 1 பில்லியன் டாலர் கடன் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என கூறினார்.

மேலும் செய்திகள்