ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
|ஜப்பானின் கிழக்கு மாகாணத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
டோக்கியோ,
ஜப்பானின் புகுஷிமா மாகாணம் மற்றும் அந்நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைந்த மாகாணத்தில் இன்று மதியம் 12.24 (ஜப்பானிய நேரப்படி) மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என ஜப்பான் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் இபராகி மாகாணத்தின் பசிபிக் கடல் பகுதியில் 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் புகுஷிமாவின் இவாகி நகரில் ரிக்டர் அளவில் 5 ஆகவும், மற்ற பகுதிகளில் 4 ஆகவும் பதிவாகி இருந்தது. அண்டை மாகாணங்களான மியாகி, யமகதா, இபராகி மற்றும் நீகடாவில் 3 ஆக பதிவாகி இருந்தது.
இதேபோன்று நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடப்படவில்லை. பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என ஜப்பான் டைம்ஸ் தெரிவிக்கிறது.