< Back
உலக செய்திகள்
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; 8 பேர் காயம்
உலக செய்திகள்

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; 8 பேர் காயம்

தினத்தந்தி
|
18 April 2024 8:28 AM IST

ஜப்பானில் ரிக்டரில் 6.3 அளவிலான கடுமையான நிலநடுக்கம் நேற்றிரவு ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டோக்கியோ,

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கத்திற்கு 8 பேர் காயமடைந்து உள்ளனர். எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அந்த பகுதியில் அமைந்துள்ள இகாடா எரிசக்தி உலை வழக்கம்போல் செயல்படுகிறது என்று அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வேறு என்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்பட்டு உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், உவாஜிமா நகரில் 12 இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டது.

எஹிம் பகுதியில் ஒசூ நகரில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இதனால், சாலையில் பாறைகள் உருண்டோடின. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஜப்பானில் 1,500 நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன. அவற்றில் பல நிலநடுக்கங்கள் லேசான அளவிலேயே இருக்கும். பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் அவை, சிறிய அளவிலான பாதிப்புகளையே ஏற்படுத்துவது வழக்கம்.

மேலும் செய்திகள்