பாலஸ்தீன கிராமங்கள் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல்
|இஸ்ரேலிய குடியேறிகள் நாப்லஸ் நகரில் உள்ள பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான வீடுகள், 100-க்கும் மேற்பட்ட கார்களை தீ வைத்து எரித்தனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அண்மை காலமாக மோதல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனர்களை சுட்டுக்கொல்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்குகரை பகுதியில் நாப்லஸ் நகரில் உள்ள ஹர் பிராச்சா என்ற கிராமத்தில் பாலஸ்தீனர்களால் 2 இஸ்ரேலிய குடியேறிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடியேறிகள் நாப்லஸ் நகரில் உள்ள பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். கத்தி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கிராமங்களுக்குள் புகுந்த இஸ்ரேலிய குடியேறிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக தாக்கினர். மேலும் பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான 30 வீடுகள், 100-க்கும் மேற்பட்ட கார்களை தீ வைத்து எரித்தனர். இந்த வன்முறையில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டார். 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே தங்கள் கிராமங்கள் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் சிலர் மேற்குகரை பகுதியில் ஜெரிகோ நகருக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் இஸ்ரேலியர்கள் வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலிய-அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து நிகழும் வன்முறை சம்பவங்களால் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.