< Back
உலக செய்திகள்
23-ம் தேதி இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு
உலக செய்திகள்

23-ம் தேதி இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு

தினத்தந்தி
|
21 Sept 2024 8:31 PM IST

இலங்கையில் நாளை மறுநாள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கி உள்ளார்.

இதனிடையே காலை 7 மணிக்கு தொடங்கிய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மனிக்கு நிறைவுபெற்றது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜனநாயக கடமை ஆற்றினார். இதேபோல் கொழும்புவில் உள்ள பாடசாலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாக்களித்தார்.

பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இலங்கையின் புதிய அதிபர் யார் என்று நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61 ஆயிரம் போலீசார், 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இலங்கையில் நாளை மறுநாள் (செப்., 23-ம் தேதி) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் விசேச பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை அதிபர் தேர்தலின்போது வாக்குச்சாவடியில் விதிமீறலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் என்றும், மாத்தளை மாவட்டம் வரக்காபொல பவுத்த கல்லூர் வாக்குச்சாவடியில் வாக்குச் சீட்டை கிழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் இலங்கை அதிபர் தேர்தலில் 164 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பவ்ரல் தெரிவித்துள்ளது.

இதன்படி தேர்தல் விதிமீறல்களில் 109 உறுதி செய்யப்பட்டது என்றும், 55 உறுதி செய்யப்படவில்லை என்றும் பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வேட்பாளர் அலுவலகம் மீது தாக்குதல், வாக்காளர் மோசடி, விதிகளை மீறி பிரச்சாரம் என விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்