இலங்கை கிழக்கு மாகாண கவர்னராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்பு..!
|இலங்கை கிழக்கு மாகாண கவர்னராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கொழும்பு,
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். அதே போல் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆனார். பிரதமராக தினேஷ் குணவர்தனே உள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் கிழக்கு மாகாண கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் பொறுப்பேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவருடன் இலங்கை வட மாகாண கவர்னராக பி.எம்.எஸ். சார்ல்ஸ், வட மேற்கு மாகாண கவர்னராக லட்சுமன் யாப்பா ஆகியோர் பதவியேற்று கொண்டனர்
வடக்கு மாகாண கவர்னர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண கவர்னர் அனுராதா யஹம்பத், வடமேற்கு மாகாணகவர்னர் வசந்த கரன்னாகொட ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செந்தில் தொண்டமான் இளம் வயதில் ஊவா மாகாண முதல்-அமைச்சர், அமைச்சர், பிரதமரின் இணைப்பு செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து, சிறப்பாக செயலாற்றினார். செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதால், அங்கு இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்குமென தொழில் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.