இளைஞர்களின் தன்னம்பிக்கையே இந்தியாவின் மிக பெரிய சொத்து: பிரதமர் மோடி பேச்சு
|ரஷியாவில் இந்திய வம்சாவளியினர் முன் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, உலகிற்கான நண்பனாக, உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை இந்தியா வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார்.
மாஸ்கோ,
இந்தியா மற்றும் ரஷியா இடையேயான வருடாந்திர 22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவர், மாஸ்கோ நகரில் விமான நிலையத்திற்கு சென்றிறங்கியதும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தில், அந்நாட்டு அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசுகிறார். இதுபற்றி பிரதமர் மோடி ரஷியா சென்றடைந்ததும் வெளியிட்ட செய்தியில், மாஸ்கோவிற்கு வந்தடைந்து உள்ளேன்.
இந்த பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு மற்றும் தனியுரிமை வாய்ந்த மூலோபாய நட்புறவை இன்னும் வலுப்படுத்துவதற்காக, குறிப்பிடும்படியாக ஒத்துழைப்பில் வருங்கால நலன் சார்ந்த விசயங்களை வலுப்படுத்துவதற்காக ஆவலாக எதிர்நோக்கி உள்ளோம்.
இரு நாடுகளுக்கு இடையேயான வலிமையான உறவுகள், நம்முடைய மக்களுக்கு பெரிதும் பலனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்திய வம்சாவளியினர் முன் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, வெற்றி பெறுவதற்கான முதல் நடவடிக்கை தன்னம்பிக்கை ஆகும் என்று பேசியுள்ளார்.
2014-க்கு முன், நாம் விரக்தியின் ஆழத்தில் இருந்தோம். ஆனால் இன்றோ, நாடு முழு அளவில் நம்பிக்கையுடன் உள்ளது. இதுவே, இந்துஸ்தானின் பெரிய சொத்து ஆகும். இளைஞர்களின் தன்னம்பிக்கையே இந்தியாவின் மிக பெரிய சொத்து.
இந்தியா மாறி கொண்டிருக்கிறது. ஏனெனில், வளர்ச்சிக்கான பாரதம் என்ற உறுதிமொழியை உண்மையாக்குவதற்கான கனவை கொண்டுள்ள 140 கோடி நாட்டு மக்களின் வலிமையில் நாடு நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் வளர்ச்சிக்கான இந்தியாவை கனவு கண்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், உலகிற்கான நண்பனாக, உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை இந்தியா வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் இன்றைய இளைஞர்கள், கடைசி பந்து வரை தோல்வியை ஏற்பதில்லை. கடைசி தருணம் வரையும் கூட என்றார். உலக கோப்பையை வெற்றி பெற்றதன் உண்மையான நிலையும், வெற்றிக்கான பயணமேயாகும் என்று கூறியுள்ளார்.