< Back
உலக செய்திகள்
ஈரானில் சட்டவிரோத போதை பொருள் பறிமுதல்; கடத்தல் கும்பல் சுட்டு கொலை
உலக செய்திகள்

ஈரானில் சட்டவிரோத போதை பொருள் பறிமுதல்; கடத்தல் கும்பல் சுட்டு கொலை

தினத்தந்தி
|
26 July 2022 8:42 PM IST

ஈரானில் 697 கிலோ சட்டவிரோத போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார், 6 பேர் கொண்ட கடத்தல் கும்பலை சுட்டு கொலை செய்துள்ளது.



தெஹ்ரான்,



ஈரான் நாட்டின் தெற்கே கெர்மன் மாகாணத்தில் சட்டவிரோத போதை பொருள் கடத்தல் பற்றி மாகாண காவல் துறைக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அதிரடியாக செயல்பட்டு, சட்டவிரோத போதை பொருள் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 697 கிலோ எடை கொண்ட போதை பொருளையும் பறிமுதல் செய்தனர். இதுபற்றி மாகாண காவல் துறை தலைவர் அப்துல்ரெசா நஸ்ரி கூறும்போது, இந்த சம்பவத்தில் ஆயுதமேந்திய போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் பெரிய அளவிலான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

போலீசாரின் இந்த போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான தேடுதல் வேட்டையில், போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற 5 பேர் காயமடைந்து உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் நடைபெறும் வழியில் ஈரான் நாடு அமைந்துள்ள நிலையில், போதை பொருள் கடத்தலால் அந்த நாடு அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக, ஈரானின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு எல்லை பகுதிகளில், அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்துள்ளன.

மேலும் செய்திகள்