மலேசியாவின் முன்னாள் பிரதமர் மீது தேச துரோக வழக்கு பதிவு
|மலேசியாவின் முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்,
கடந்த 1957-ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு மலேசியாவில் மன்னராட்சி தொடங்கியது. அங்குள்ள 9 மலாய் மாகாண சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள் சுழற்சி முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலேசியாவின் மன்னராக பதவியேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மலேசியாவின் முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல்லா குறித்து அவதூறான வகையில் பேசியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் முஹ்யித்தீன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மலேசியாவின் கெலாண்டன் மாகாண கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த 14-ந்தேதி, கெலாண்டனில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய முஹ்யித்தீன், 10-வது பிரதமராவதற்கு தனக்கு போதிய ஆதரவு இருந்தும், அப்போதைய மன்னர் சுல்தான் அப்துல்லா தன்னை அப்பதவிக்கு நியமிக்கவில்லை என கேலிக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடைபெற்றபோது, தன் மீதான தேச துரோக குற்றச்சாட்டுக்கு முஹ்யித்தீன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் முஹ்யித்தீனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை நவம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.