மீண்டும் சீண்டும் சீனா...! பேச்சுவார்த்தை நடந்து வரும்போதே எல்லையில் கட்டுமான பணிகள்...!
|சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வியாழன் அன்று வெளியிட்ட அறிக்கையில் "எல்லைப் பகுதியில் அமைதியை" பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தது.
புதுடெல்லி:
படைகளை வாபஸ் பெறவும், எல்லையில் பதற்றத்தை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா கூறி வருகிறது. அதே நேரத்தில் அக்சைசின் பகுதியில் ராணுவ தளம் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேக்சர் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களுடன் கூடிய கட்டுரையை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
நீண்ட தூர கண்காணிப்பு ரேடார்கள் கொண்ட ராணுவ வசதிகள் விரிவாக்கம், நிலத்தடி வசதிகள், சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் சாலைகள், சீன மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அமைத்து வரும் பல்வேறு கட்டமைப்புகள் ஆகியவை மேக்சர் செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகத் தெரிகின்றன.
இந்த கட்டமைப்புகள் அனைத்தும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமானங்கள் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில் இரு நாடுகளும் எல்லைப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.
சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வியாழன் அன்று வெளியிட்ட அறிக்கையில் எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தது. இருந்த போதிலும், செயற்கைக்கோள் படங்களின் ஆதாரம், சீனாவின் நிலைப்பாடு குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.