< Back
உலக செய்திகள்
ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை; உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவி - கனடா அரசு அறிவிப்பு
உலக செய்திகள்

ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை; உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவி - கனடா அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
12 April 2023 6:26 PM IST

ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த கனடா அரசு, உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

ஒட்டாவா,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது படைகளை அனுப்பி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஓராண்டுக்கும் மேலாக இந்த தாக்குதல் நீடித்து வருகிறது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவை பல்வேறு ராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன. அதே சமயம் ரஷியா மீது சர்வதேச நாடுகள் இணைந்து வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

அந்த வகையில் கனடா அரசு இதுவரை உக்ரைனுக்கு சுமார் 8 பில்லியன் டாலர் அளவிலான பொருளாதார, ராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக கனடா அரசு உறுதியளித்துள்ளது.

டொரோண்டோவில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஸ்மிஹல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனுக்கு கனடாவில் இருந்து 21,000 ரைபிள்கள், 38 இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 24 லட்சம் தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதோடு ரஷியாவைச் சேர்ந்த 14 நபர்கள் மற்றும் 34 நிறுவனங்கள் மீது கனடா அரசு பொருளாதார தடைகளை விதிப்பதாக அவர் தெரிவித்தார். ரஷிய நிதித்துறையுடன் தொடர்புடைய 9 நிறுவனங்களுக்கு கூடுதல் தடைகளை விதிப்பதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்